நாட்டில் சுமார் 14 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கான நிதியுதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஊரக அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 12 இலட்சத்து 6 ஆயிரம் பேர் மாத்திரமே அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 14 இலட்சம் பேருக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பான மீளாய்வின் முதற்கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 9 இலட்சத்து 91 ஆயிரம் பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முதற்கட்டத்தின் கீழ் சுமார் 9 இலட்சத்து 89 ஆயிரம் பேர் கொடுப்பனவைப் பெற்று வந்த நிலையில், புதிய ஆய்வின் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 2 இலட்சத்து 15 ஆயிரம் பயனாளிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டத்திற்கான மீளாய்வு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
மீளாய்வுப் பணிகள் நிறைவடையும் வரை தற்போதுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படாமல், அவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும், முதற்கட்டத்தின் கீழ் சுமார் 7 இலட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் மேலதிகமாக மீளாய்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் அஸ்வெசும நிவாரணம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவடையாமல், எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, அஸ்வெசும கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவோ இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவோ வெளியாகும் தவறான தகவல்களை நம்பி பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







