நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான வசதிகளுடன் கூடிய ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்காகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புத்தளம், மககும்புக்கடவல கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று வெள்ளிக்கிழமை (30) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
309 பாடசாலைகள் தேர்வு: ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நனவாக்கும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 309 பாடசாலைகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளும் திட்டங்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.
கல்வி ஏற்றத்தாழ்வுகளைக் களைதல்: நகர்ப்புறத்தின் பிரதான பாடசாலைகளுக்கும் கிராமப்புறப் பாடசாலைகளுக்கும் இடையில் காணப்படும் பௌதிக வளங்கள் மற்றும் கல்வி வாய்ப்புகள் தொடர்பான இடைவெளியைக் குறைத்து, அனைத்துச் சிறார்களும் தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
முறையான தரநிலைகள்: பாடசாலைக் கட்டடங்கள், தளபாடங்கள் மற்றும் ஏனைய பௌதிக வளங்கள் மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் தேவைகளுக்குப் பொருந்தும் வகையில், விஞ்ஞானபூர்வமான முறைகளிலும் உரிய தரநிலைகளின்படியும் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்யப் பொறியியல் பிரிவுகளும் நிபுணர் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பங்களிப்பு: அமைச்சு மட்டம் முதல் மாகாண சபைகள் மற்றும் பாடசாலை மட்டம் வரையில் அனைவரும் எவ்வித வேறுபாடுகளுமின்றி பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரதமர், மாணவர்களின் திறன்களை வளர்ப்பதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழில்சார் தகுதிகளையும் மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் தெரிவித்தார்.







