வடக்கு மாகாண உற்பத்தியை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு

29
0
Spread the love

வடக்கு மாகாணத்தின் வளங்களையும் உற்பத்தித் திறனையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் ‘வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027’ தொடர்பான உத்தியோகபூர்வ அறிமுகமும் திட்ட விளக்கக் கூட்டமும் ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நேற்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாநாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அவர் சுட்டிக்காட்டிய முக்கிய குறிப்புகள்:
சர்வதேசச் சந்தை இணைப்பு: வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும், உள்ளூர் உற்பத்தியாளர்களைச் சர்வதேசக் கொள்வனவாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் நேரடியாக இணைப்பதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
பொருளாதார வளர்ச்சி: முதலீடுகளை ஈர்ப்பதுடன் மாத்திரம் நில்லாது, உள்ளூர் உற்பத்திகளைப் பரந்த சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவது மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டின் சிறப்பம்சங்கள்: இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான கண்காட்சி, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளின் அறிமுகங்கள் மற்றும் நேரடி வர்த்தகச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
வணிக இலக்குகள்: இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 50 முதல் 75 வரையான நேரடி வணிகத் தொடர்புச் சந்திப்புகளை ஏற்படுத்துவதையும், 75 முதல் 100 வரையான தகுதியான வெளிநாட்டுக் கொள்வனவாளர்களை ஈர்ப்பதும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டல்: சர்வதேசச் சந்தைத் தகவல்கள், வெளிநாட்டு வர்த்தக விதிமுறைகள், தரச் சான்றிதழ்களைப் பெறும் முறைகள், வர்த்தக நிதி, இடர் முகாமைத்துவம் மற்றும் போக்குவரத்து விநியோகச் சங்கிலி ஏற்பாடுகள் தொடர்பில் உற்பத்தியாளர்களுக்கு வல்லுநர்களின் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
பாடசாலைத் தோட்டச் செயற்றிட்டம்:
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டமும் இந் நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவுசெய்யப்படும் பாடசாலைகளில் இத்தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.
வட மாகாணத்தின் இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்திகளைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம் பிராந்திய பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் ஒரு நீண்டகாலத் திட்டமாக இந்த ஏற்றுமதியாளர்கள் மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here