ஆனந்தபுரத்தில் 300 போராளிகள் படுகொலை செய்யப்பட்டதாகப் புதிய அறிக்கையில் குற்றச்சாட்டு

26
0
Spread the love

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது, கடுமையாகக் காயமடைந்த நிலையில் ஒரே கட்டடத்தில் விடப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டதாகப் புதிய அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரில் உயிர்தப்பியவர்கள் வழங்கிய வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP) தயாரித்துள்ள ‘ஆனந்தபுர மோதல்’ என்ற அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனந்தபுரத்தின் முற்றுகையிடப்பட்ட பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த கணினி மையத்தில், போரின் இறுதி நாட்களில் நூற்றுக்கணக்கான காயமடைந்த போராளிகள் தங்கியிருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி அவர்கள் அங்கு கைவிடப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்களைக் காண முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து உயிர்தப்பிய ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தில், தான் வெளியேறியபோது காயமடைந்தவர்கள் உயிருடன் இருந்ததாகவும், அவர்களிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் அல்லது சயனைட் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கு கைவிடப்பட்டவர்களுடன் பயிற்சி பெற்றிருந்த மற்றொரு நபர், அவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை என்றும், பின்னர் அவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாக அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஆனந்தபுரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து சாட்சியமளிக்க யாரும் உயிர்தப்பவில்லை என நீண்டகாலமாகக் கருதப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது சிலர் முன்வந்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இராணுவ வெற்றி என்பது காயமடைந்தவர்களைக் கொல்வதற்கான உரிமையை வழங்காது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாகத் தொடரும் தண்டனையின்மை, குற்றவியல் பொறுப்பிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகளை இலங்கை வெளிப்படுத்தி, அவற்றுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here