கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், அங்கு நிலவிய சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் விளக்கம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அரசாங்கத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட வகையில் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக நீதியமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, பதற்றமடையாமல் அமைதியாகச் செயற்படுவதுடன், மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு சர்ச்சைக்குரிய தேரர் ஒருவர் சென்ற சம்பவம், போராட்டத்தின் பின்னணி தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தியதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியிலேயே போராட்டம் கைவிடப்பட்டதாகவும் தென்னிலங்கை ஊடகமொன்றை மேற்கோள்காட்டி தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி விகாரமகாதேவி பூங்காவில் பல நாட்களாகத் தொடர்ந்த சத்தியாக்கிரகம், மகாநாயக்க தேரர்களின் தலையீட்டைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







