நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் இன்று (30) ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் 2025ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் பேரணியில் கலந்துகொண்ட கல்விசார் ஊழியர்கள், உயர்கல்வியைப் பாதுகாக்க வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கல்விசார் ஊழியர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கொன்றும் நடைபெற்றுள்ளது.







