யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயக் கட்டுமானங்கள் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவற்றை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாழ். மாநகர சபைக்குக் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான முக்கிய விவரங்கள்:
காணி ஒப்பந்தம்: தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள காணியானது நல்லூர் ஆலயத்திற்குச் சொந்தமானதுடன், அது நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள காணியாகும்.
பொலிஸாரின் கடிதம்: குறித்த காணிக்குள் அமைந்துள்ள நினைவாலயக் கட்டுமானங்கள் மாநகர சபையின் முறையான அனுமதிகள் எதையුமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய கட்டுமானங்கள் மக்கள் மத்தியில் பழைய யுத்த நினைவுகளை மீளுருவாக்குவதுடன், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர், அவற்றை உடனடியாக அகற்றுமாறு கோரியுள்ளார்.
கடந்த கால நிகழ்வுகள்: கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வின்போது, கண்ணாடி இழைகளால் (Fibre glass) உருவாக்கப்பட்ட தியாக தீபத்தின் சிலை அங்கு வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. எனினும், நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாள் காலை யாழ்ப்பாணப் பொலிஸார் அந்தச் சிலையைக் கைப்பற்றி எடுத்துச் சென்றதுடன், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







