ஹோர்முஸ் நீரிணையில் 27 இந்திய மாலுமிகளுடன் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று காந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த MT LOUISE 1 என்ற எண்ணெய்க் கப்பல் மீது ஒக்டோபர் 30ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகளும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
கப்பலின் அடிப்பகுதியில் சிறிய படகொன்றின் மூலம் இரண்டு காந்த வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டதாகக் கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் கப்பலின் இயந்திர அறையில் தீப்பற்றியதுடன், அதன் இயக்கமும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. எனினும், கப்பலின் பணியாளர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஓமான் நாட்டின் கசாப் பகுதிக்கு வடகிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கப்பலில் இருந்தவர்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றும், கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 29ஆம் திகதி MT ARZANAH என்ற மற்றொரு எண்ணெய்க் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. லைபீரியக் கொடியுடன் பயணித்த அந்தக் கப்பலில் இருந்த இரண்டு இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்விரு சம்பவங்களிலும் மொத்தமாக 29 இந்திய மாலுமிகள் பாதிப்பின்றி இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கப்பல் நிர்வாக நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்றுள்ள இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவங்கள் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.







