இலங்கையின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்றைய தினம் (02.11.2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இவ்வாறான மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிகக் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்கப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







