கடலில் காணாமல் போன ஏழு மீனவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி மாத்தறை குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களும் காணாமல் போயுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் காணாமல் போன ஏழு மீனவர்களையும் கண்டறியும் நோக்கில் இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளின் கீழ் உள்ள கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காணாமல் போன மீனவர்கள் சென்றிருக்கக்கூடிய கடற்பரப்புகளை உள்ளடக்கும் வகையில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.







