இலங்கையின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான திகதி, நேரம், இடம் மற்றும் நேர்முகப் பரீட்சைச் சபை இலக்கம் ஆகிய விபரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாகாணங்கள் மற்றும் மொழிமூலங்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் தனித்தனியாகப் பதிவேற்றப்பட்டுள்ளதுடன், முழுநேர அங்கவீனமுற்ற விண்ணப்பதாரர்களுக்கான தகவல்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், நேர்முகப் பரீட்சைக்குச் சமூகமளிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களைக் கொண்ட G3 மற்றும் G4 படிவங்களும், பரீட்சையின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களுக்கான F2, F3, F4 மற்றும் F5 மாதிரிப் படிவங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமக்கான அறிவுறுத்தல்களை கவனமாகப் பரிசீலித்து, அறிவிக்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் தேவையான ஆவணங்களுடன் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கான அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.







