வங்காள விரிகுடாவில் உருவான “முரசு” சூறாவளி தீவிர புயலாக வலுப்பெற்று, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் கரையைக் கடந்து வருவதாக வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கம் காரணமாக இன்று (3) தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







