வரி செலுத்துவோர் அடையாள எண்ணான (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு தேவையற்ற முறையில் வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TIN சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN எண்ணைப் பெற்றுக்கொள்வது 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் குறிப்பிட்ட எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கணக்குகளைத் திறத்தல், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன வருமான உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் அவசியமாகும்.
மேலும், காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல், வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கும் TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், TIN சான்றிதழைப் பெறுவதற்காக திணைக்கள அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள், தங்களுக்கு அவசியமான சேவை தொடர்பில் முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
TIN இலக்கத்திற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்படுவதற்கு சிறிது காலம் தேவைப்படும் எனவும் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு TIN இலக்கம் உருவாக்கப்பட்ட பின்னர், விண்ணப்பதாரர்கள் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் தேவையற்ற அவசரத்தையும் பதற்றத்தையும் தவிர்த்து, இணையவழி சேவைகளைப் பயன்படுத்தி TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.







