மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிடும் தொகை சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (02) இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த சில யோசனைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை அதே விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை குறிப்பிட்ட அவர், உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கம் 57 பில்லியன் ரூபாவை எரிபொருள் மானியமாக ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டில் விலைகளை முழுமையாகக் குறைப்பதற்கோ அல்லது மேலும் பெரிய அளவிலான நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசாங்கத்தால் முடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தை விலை மாற்றங்களின் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலிப்பதால், எரிபொருள் விலைகளை ஒப்பீட்டளவில் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







