மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் எலிக்காய்ச்சல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் வைத்தியர் மாசிலாமணி ஜெயராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், எலிக்காய்ச்சல் என்பது லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படக்கூடிய தொற்று நோய் என விளக்கமளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசடைந்த நீர், சேறு மற்றும் மண்ணில் காணப்படும் கிருமிகள், உடலில் உள்ள காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் ஊடாகவும் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளின் சவ்வுகள் வழியாகவும் உடலுக்குள் நுழையக்கூடும். இதனால் வயல் நிலங்களில் பணியாற்றுவோர் மற்றும் வெள்ளநீரில் நடமாடுவோர் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, குறிப்பாக கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் தசைவலி, கண்கள் சிவத்தல், வாந்தி மற்றும் உடல் சோர்வு ஆகியவை எலிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.
சிறுநீர் வெளியேற்றம் குறைதல், மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல் மற்றும் இரத்தக்கசிவு போன்ற ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
வயல் மற்றும் சேற்றுப் பகுதிகளில் பணியாற்றுவோர் பாதுகாப்பான காலணிகளை அணிவதுடன், தேவையற்ற வெள்ளநீர் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். எலிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளும் அவசியமாகும்.
மேலும், தேசிய வழிகாட்டல்களுக்கு அமைவாக ஆபத்துள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின் கீழ் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்தில் காய்ச்சல் ஏற்படும்போது அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் எலிக்காய்ச்சலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







