Lகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியில் பொலிஸாரின் வீதிச் சோதனையின்போது, 14 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (நவம்பர் 2) இரவு வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, ஒருவர் தன்னிடமிருந்த பொதியைக் கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
கைவிடப்பட்ட பொதியைப் பரிசோதித்த பொலிஸார், அதற்குள் 14 சிறிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோகிராம் 340 கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் 62 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







