சபாநாயகர் தலைமையில் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்பகல் வேளையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய, மு.ப 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்காகவும், அதனைத் தொடர்ந்து மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான விசேட கேள்விகளுக்காகவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வின் பிரதான நிகழ்வாக மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2508/27 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இதனையடுத்து, பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீது விவாதங்கள் நடத்தப்பட்டுச் சபையின் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய முக்கிய சட்டமூலங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பில் ஆராயப்படும் இன்றைய அமர்வு அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.







