கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில், கட்டுகஸ்தோட்டை குடுகல பகுதியில் அமைந்துள்ள இயந்திர உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் இன்று (நவம்பர் 4) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீயைக் கட்டுப்படுத்த கண்டி மற்றும் மாத்தளை தீயணைப்புப் பிரிவுகளின் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
தீ விபத்து காரணமாக ஏ9 பிரதான வீதியின் குடுகல பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







