இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2010 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெலிசறை தேசிய சுவாச நோய் வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை நிபுணர் சமன் இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (நவம்பர் 4) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய புற்றுநோய் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் வெலிசறை தேசிய சுவாச நோய் வைத்தியசாலை ஆகியவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்படும் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரிடமும் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் நோயின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களிலேயே மருத்துவமனைகளுக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமன்றி புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
முன்னர் 50 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகளவில் அடையாளம் காணப்பட்ட இந்நோய், தற்போது 40 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களிடமும் அதிகரித்து வருவதாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் நுரையீரல் நோய்கள் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிசறை தேசிய சுவாச நோய் வைத்தியசாலையில் ஒவ்வொரு புதன்கிழமையும் நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.
நீண்டகாலமாக அல்லது சமீபகாலமாக புகைப்பிடிக்கும் பழக்கமுடைய 50 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புகை மற்றும் மாசுகளைச் சுவாசிக்கக்கூடிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த உறவினர்கள் ஆகியோருக்கும் வயது வேறுபாடின்றி பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் சமன் இத்தமல்கொட மேலும் தெரிவித்துள்ளார்.







