நாட்டில் 60 வயதைப் பூர்த்தி செய்துள்ள 170,950 விவசாயிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 3,975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாகச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை முடுக்கிவிட்டுள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட விசேட அறிவுறுத்தல்களுக்கு அமைய, கடந்த 2024 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு காரணங்களால் தேங்கிக் கிடந்த பெருமளவிலான விவசாய ஓய்வூதிய விண்ணப்பங்களின் பரிசீலனைப் பணிகள் தற்போது வெற்றிகரமாக முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, புதிதாகச் சமர்ப்பிக்கப்பட்டு எந்தவிதக் குறைபாடுகளுமின்றி கிடைக்கப்பெற்றுள்ள தகுதியான விண்ணப்பங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உரிய முறையில் மாதாந்தத் தவணைப் பணத்தைச் செலுத்தாதவர்கள் மற்றும் 25 சதவீதத்திற்கும் அதிகமான தவணைப் பணத்தைச் செலுத்தியுள்ள பங்களிப்பாளர்களுக்கு நிகரத் தவணைப் பணத்தைத் (Net installments) தயாரிக்கும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 60 வயதைப் பூர்த்தி செய்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த விவசாயிகளின் நிலுவை ஓய்வூதியங்களை வழங்கும் விசேட திட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. திறைசேரியினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கொடைக்கு அமைய இந்த நிலுவப்புக் கொடுப்பனவுகள் அனைத்தும் விரைவில் வழங்கப்பட்டுத் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







