இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான பண்டிகையான தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்ததை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று அனைவரதும் மனங்களிலுள்ள அறியாமை இருள் அகன்று ஒளி பரவ வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையின் உண்மையான அர்த்தம் வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால், மனித இதயங்களில் அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவத்தின் ஒளியை ஏற்றி வைப்பதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெறுப்புக்குப் பதிலாகக் கருணையையும் பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும் தேர்ந்தெடுத்து, பரிவுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பும் உறுதியை இத்திருநாளில் அனைவரும் புதுப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அனைத்துச் சமய மற்றும் கலாசார அடையாளங்களை மதித்து, சமத்துவத்துடன் இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணமானது தீபங்களின் ஒளியால் மேலும் ஒளிரட்டும் என அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.







