அனுராதபுர புனித நகர திட்டத்திற்கு எதிராக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம், நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விகாரை வளாகத்தில் தற்காலிக கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக அனுராதபுர தலைமையகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை விசாரித்த அனுராதபுர நீதவான் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் தொல்பொருள் சின்னங்களுக்குச் சேதம் விளைவிக்காமல் தற்காலிக கூடாரங்களை அகற்றுமாறும் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிராகரித்துள்ள பிக்குகள் மற்றும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறாமல் திறந்த வெளியில் இரவைக் கழித்துத் தங்களது போராட்டத்தைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றனர். அரசாங்கம் அனுராதபுர புனித நகர திட்டத்திற்குரிய வர்த்தமானி அறிவித்தலை முழுமையாகத் திரும்பப் பெறும் வரை இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட மாட்டாது என பலாங்கொட கஸ்ஸப தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்







