தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த ஒரு நாள் வருவாயைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 7ஆம் திகதி காலை முதல் இன்று (08) காலை 6:00 மணி வரையிலான 24 மணித்தியால இடைவெளிக்குள், ஹட்டன் டிப்போவிலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் மொத்தமாக 82 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தப் பேருந்துச் சேவைகள் ஊடாக ஒரே நாளில் 47 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான வரலாற்றுச் சிறப்புமிக்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சேவைகள் டிப்போவின் நிதி நிலையை உயர்த்தியுள்ளதுடன், ஊழியர்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.







