வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதியளவில் புதிய வளிமண்டலக் குழப்பமொன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த வளிமண்டலக் குழப்பமானது படிப்படியாக வலுவடைந்து, நவம்பர் 13 ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாகவும், நவம்பர் 15 ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் தீவிரமடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படும் எனவும், இடியுடன் கூடிய மழையின்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாறிவரும் சீரற்ற வானிலை மற்றும் கடல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் மேலதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது







