தமது பல முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அடையாளப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்துள்ளதாக அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் உட்புறப் பணிகள் மற்றும் சேவை நடவடிக்கைகளில் பெரும்பான்மையானவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச சேவைகள் பல முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமது பிரச்சினைகள் குறித்துப் பலமுறை அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அறிவித்தும் எத்தகைய உரிய தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட சங்கத்தின் பிரதிநிதிகள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளனர்.







