கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழையால் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல அரச நிறுவனங்கள் இணைந்து விசேட கூட்டுச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன. கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லி பால்தசார் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் நேற்று (08) முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட கொழும்பு, கிழக்கு கொழும்பு, மேற்கு கொழும்பு, பொரளை மற்றும் மத்திய கொழும்பு ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வடிந்தோடும் பாதைகளில் அடைப்புகள் ஏற்பட்டுள்ள 60 முக்கியமான இடங்கள் அவசரத் தூய்மைப்படுத்தலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாரஹேன்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கிருலப்பனை, தெமட்டகொட மற்றும் புதிய பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் முப்படையினர், கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் பணியாளர்கள் இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கடும் மழையினால் கொழும்பு நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போக்குவரத்து முடங்கியதைத் தொடர்ந்து, இவ்வாறான திடீர் வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள உடனடி நிவாரண நடவடிக்கைகளுடன் சேர்த்து நீண்டகாலத் தீர்வுத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







