தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் இரண்டு முக்கியப் பிரிவினர் தீவிர தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. இதன்படி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது கோரிக்கைகளுக்கு வலியுறுத்தி நாளை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகப் போராட்டமொன்றை நடத்தவுள்ளது. மருத்துவர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையை மீளாய்வு செய்தல் போன்ற கோரிக்கைகள் இதில் அடங்குவதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வாகன இறக்குமதி அனுமதிப்பத்தம் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் சம்பளத் திருத்தத்தின் கீழ் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால் மருத்துவர்கள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண சபைகள், அமைச்சுகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் பெரும்பான்மையானவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களைச் சார்ந்துள்ளதால், இந்த இரு துறைகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக நாட்டின் அரச சேவைகள் பல முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது






