கொழும்பு நகரில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்கு மாநகர நிர்வாகத்தின் முறையற்ற பராமரிப்பும் மேயரின் அலட்சியப் போக்குமே முழுமையான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். கடந்த காலங்களில் கொழும்பில் இதைவிட பல மடங்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், வடிகால்களும் கால்வாய்களும் உரிய முறையில் துப்பரவு செய்யப்படாத காரணத்தினாலேயே தற்போது சிறிய மழையின்போதே தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.
மாநகர சபைக்குரிய நிதி மற்றும் வருமானம் இருந்தபோதிலும், குப்பைகளை அகற்றுதல், வடிகால்களைச் சீரமைத்தல் போன்ற அடிப்படைப் பணிகளைக்கூடச் செய்யாமல் நவீன நகரமாக்குவதாக வெற்று விளம்பரங்களில் நிர்வாகம் ஈடுப்பட்டு வருவதாக அவர் விமர்சித்துள்ளார். கனமழை எச்சரிக்கைகள் முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய தற்போதைய மாநகர நிர்வாகம் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







