அனுராதபுர பிக்குகளின் போராட்டம் குறித்து சத்தாரதன தேரர் சாடல்

23
0
Spread the love

அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்குகளோடு, தவறான தொழில் செய்யும் பலரும் இணைந்துள்ளனர். இவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று இராஜாங்கணை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் உள்ளிட்ட சிலர் இணைந்து அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்கணை சத்தாரதன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் இந்த பௌத்த தேரர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களையும் இராஜாங்கணை சத்தாரதன தேரர் வெளியிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டை நேசிக்கும் தலைவரான அநுர குமார திஸாநாயக்க இந்த நாட்டை நேசிக்கின்றார். பௌத்த சாசனத்தையும் நேசிக்கின்றார். இதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அநுராதபுரத்தில் தற்போது பௌத்த பிக்குகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். அனைத்து மக்களுக்கும் தேவையான வேலைகளைச் செய்யுங்கள். மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் மக்களுக்கே பிரச்சினைகளை ஏற்படுத்தும் நிலைமை நிறுத்தப்பட வேண்டும்.

அநுராதபுர மக்களிடம் நான் கூறுவது என்னவென்றால், நாங்கள் அநுராதபுரத்தில் இவர்களுக்கு பாடம் புகட்டுவோம். இல்லாவிட்டால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நாளை(11.11.2026) மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்தது.

எமது நாட்டை இந்தக் கொள்ளையர்களிடம் இருந்தும், மோசடிக்காரர்களிடம் இருந்தும், ஊழல்வாதிகளிடம் இருந்தும் நாம் விடுவிக்க வேண்டும்.
தற்போது, கோட்டாபய ராஜபக்ச சிறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார். நாமல் ராஜபக்ச உள்ளே செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களும் வரிசையாகச் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. அனைத்து திருடர்களும் வரிசையாக சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. இன்னும், 20 மற்றும் 30 வருடங்களானாலும் சரி, ஒவ்வொரு திருடர்களுக்கும் தண்டனைக் கிடைக்கும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாள்தோறும் கைது செய்யப்படுகின்றனர். போதைப்பொருள் பணத்துடன் தொடர்புடையவர்களும் பிடிபடுகின்றார்கள். கசிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களும் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறானவர்கள் தான் அநுராதபுர போராட்டக் களத்தில் ஒன்று கூடியிருக்கின்றனர்.

அநுராதபுரத்தில் சில பிக்குகளோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுள் தவறான தொழில் செய்யும் சிலரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பௌத்த மதத்திற்காகவோ, நாட்டிற்காகவோ ஒன்றுகூடவில்லை. தங்களுடைய இருப்பையும், தங்களுடைய வயிற்றுப் பிழைப்பையும் பாதுகாப்பதற்காகவே ஒன்றுகூடியிருக்கின்றார்கள்.

அங்கு இருக்கின்ற அனைவரையும் விட நாங்கள் சிங்கள மக்களை நேசிக்கின்றோம். பௌத்த தர்மத்தையும் நேசிக்கின்றோம். இதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வரலாற்றில் எந்த அரசாங்கமும், எந்த ஜனாதிபதியுடம் செய்யாத அளவிலான வேலைத்திட்டங்களை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னெடுத்து வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here