நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையினை இன்றைய தினம் (12) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நிகழ்த்தவுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமான இதில், நாட்டின் அடுத்த ஆண்டிற்கான வருமானக் கணிப்புகள், நிதிக் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்த விவரங்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய, 2027ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 4,992 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மூலதனச் செலவினங்களுக்காக மொத்தம் 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 வரையான நாட்களில் நடைபெற்று, நவம்பர் 20 அன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதங்கள் இடம்பெற்று டிசம்பர் 14ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.







