2025ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இளையவர் போட்டி மற்றும் பெரியோருக்கான ஏசியன் ரோல் போல் ( Roll ball) அணியில் மன்னார் மாவட்டத்திலிருந்து இலங்கை அணிக்குத் தெரிவாகி சர்வதேச ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கொண்ட வீரர்கள் மற்றும் ஆசிய ரீதியில்,மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட வீராங்கனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, இன்றைய தினம் (3.06) வியாழக்கிழமை மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 27 வரை கென்யா நைரோபியில் இடம் பெற்ற ரோல் போல் உலக கிண்ண போட்டிக்குத் தெரிவான இலங்கை அணியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் தெரிவாகிக் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போட்டியில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்ற நிலையில் குறித்த அணியில் விளையாடித் திறமையை வெளிப்படுத்திய 4 வீரர்களும் ஆசிய ரீதியில் விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த 3 வீராங்கனைகளுமே இவ்வாறு கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்குச் சமூக செயற்பாட்டாளர் அகஸ்டின் மற்றும் AAA ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினரால் பணப் பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சமூக செயற்பாட்டாளர் அகஸ்டின் அவர்கள் சர்வதேச ரீதியில் வெற்றியீட்டிய நான்கு வீரர்களுக்கும் தலா 50 ஆயிரமும் ஆசிய ரீதியில் வெற்றியீட்டிய வீராங்கனைகளுக்குத் தலா 20 ஆயிரமும் வழங்கி வைத்தார்.
இதேவேளை மன்னார் AAA ஸ்போர்ட்ஸ் (sports)நிறுவனத்தினர் ஆசிய ரீதியில் வெற்றி பெற்ற 3 வீராங்கனைகளுக்கும் தலா 15000 பணப்பரிசினை வழங்கி வைத்தனர்.
ரோல் போல் சங்கத்தின் மன்னார் கிளைத் தலைவர் பொறியியலாளர் விமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், க.கனகேஸ்வரன்,வலயக்கல்விப்பணிப்பாளர், செல்வன்,மன்னார் நகரசபைத் தலைவர் டேனியல் வசந்தன்,மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு, சமூக சேவையாளர் அகஸ்ரின், மன்னார் ரோல் போல் சங்கச் செயலாளர் கிருஸ்ரி, பொருளாளர் மற்றும் ரோல் போல் பயிற்றுவிப்பாளருமான பி.எச்.ஐ வின்சன் உட்பட ரோல்போல் விளையாட்டு வீரர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 








