வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் ஆறாவது வாரமாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், மற்றும் வீடுகள் இன்றி வாழ்ந்து வருவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் ஆகியவற்றை பலாலி பொலிஸார் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குடிநீர் மற்றும் மலசல கூட வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.







