பிள்ளையானின் வாக்குமூலத்திற்கமைய முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இனியபாரதி
என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06.07) திருக்கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 08 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 03 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சுமத்தி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







