மன்னார் மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் (video)

57
0
Spread the love

 

மன்னாரில் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களை விடுவிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது

அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடி இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவோம் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (16.07)புதன்கிழமை,மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விவசாயக் காணிகளைக் காடுகளாக வர்த்தமானி வெளியிட்டுள்ளனர்.அது தொடர்பில் நிறைய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில், 2000-ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை விடுவிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மிக விரைவில் அந்த காணிகளை விடுவிப்போம். கீழ் மல்வத்ஓயா நீர் திட்டத்தை மூன்று வருடங்களுக்குள் செய்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதனூடாக மன்னார் மாவட்டத்தில் சிறு போக செய்கையின்றி இருக்கும் 30 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்க முடியும். மேலும்,எத்தனை ஏக்கர் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்கிறோம் என்பதை விட உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது தொடர்பில் விவசாயிகள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.விவசாயம் தொடர்பான அதிகாரிகள் விவசாயிகளுடன் இணைந்து இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியான அறிவினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.நெல் உற்பத்தி மாத்திரமல்ல பால் உற்பத்தியும் இருக்கின்றது. அதை அதிகரிக்க வேண்டிய ஒரு செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும் இலக்கில்லாமல் விவசாயிகளுக்கு பொருட்களை பகிர்ந்து கொடுப்பதில் எந்த வித பிரயோசனமும் இல்லை.

கால்நடை திணைக்களத்தினர் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினை பலப்படுத்த வேண்டும்.கால்நடை உற்பத்தியாளர்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இந்த மாவட்டத்திற்குப் பொருத்தமான செயற்திட்டம் ஒன்றைத் தயாரியுங்கள்.

அந்தத் திட்டத்திற்கு ஏற்ப விவசாயிகளும் செயற்பட வேண்டும் இல்லையெனில் ஏற்கனவே நாட்டில் என்ன நடந்ததோ அதே தான் தொடர்ந்தும் நடைபெறப்போகிறது என்றார்.

மன்னார் மாவட்டச் செயலாளர் கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் செல்லத்தம்பி திலகநாதன், கே. காதர் மஸ்தான்,மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர், அனைத்து திணைக்கள அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.