மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் படகு ஒன்று அதன் இயந்திரத்துடன் சேர்த்து எரியூட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்
மீனவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (18.07)மீன் பிடிக்க கடலுக்குச் சென்று விட்டு திரும்பி வந்து படகினை கரையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக அவர் கடற்கரைக்குச் சென்றபோது அங்கே அவரது படகை காணவில்லை.
இவ்வேளையில், கடற்கரையில் இருந்து சற்றுத் தொலைவில் அவரது படகு மற்றும் இயந்திரம் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
விடத்தல் தீவு மேற்கு, மீனவர் கூட்டுறவு சங்கத்தின் பொருளாளருடைய பல லட்சம் ரூபாய் பெறுமதியான படகே இவ்வாறு இயந்திரத்துடன் சேர்த்து எரியூட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அடம்பன் பொலிஸார் மற்றும்
தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து குறித்த பகுதிக்குச் சென்று எரியூட்டப்பட்ட படகு மற்றும் இயந்திரம் ஆகியவற்றைப் பார்வையிட்டதோடு,விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
விடத்தல் தீவு கடற்கரையில் கடந்த சில தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி படகுகளின் வெளி இணைப்பு இயந்திரங்கள் இனம் தெரியாத நபர்களினால் இரவு நேரங்களில் கடலில் தூக்கி வீசப்பட்டு வருவதும் காலையில் மீனவர்கள் அவற்றை மீட்டுத் தொழிலுக்கு சென்று வருவதுமான சம்பவங்கள் இடம் பெற்று வந்த வேளையில் இவ்வாறு படகு எரிக்கப்பட்ட சம்பவமானது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












