யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று (31.07) வியாழக்கிழமை புதிதாக மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் மூன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த 11 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இலக்கம் ஒன்று ” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இலக்கம் இரண்டு ” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 26 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த பதினோராவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று வரை 40 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 35 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியில் மொத்தமாக 105 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 118 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







