மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2 வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,இ ன்றைய தினம் புதன்கிழமை (13.08) மாலை ஜனாதிபதிக்கும், மன்னாரில் இருந்து சென்ற குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு ,ஒன்று இடம் பெற வுள்ள நிலையில்,குறித்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றைய தினம் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
மன்னார் தீவுப் பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.08) பாரிய காற்றாலைகளின் உதிரி பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகரப் பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு,எதிர்ப்பு ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் 11 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக சிறுதோப்பு மற்றும் அதனை அண்டிய கிராம மக்களும் வருகை தந்ததுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருண்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகள் வருகை தந்து ஆதரவு வழங்கியுள்ளனர்.
மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை செயற்திட்டம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்று(13) பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து பேச உள்ளனர்.
போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் ஐந்து பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், பிரதேச செயலாளர் போன்றோர் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றுகின்றனர்.
குறித்த பேச்சு வார்த்தையின் போது போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், தமக்கு சாதகமான பதில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.








