அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்கு ஏற்றவாறு வேலை செய்யாது அரசாங்கத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து மக்களுக்காகவே வேலை செய்ய வேண்டுமென கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான உப்பாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26.08) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் அரச அதிகாரிகள் தாங்கள் நினைத்தது போல நடக்க முடியாது அவர்கள் எப்போதும் மக்களுக்கு சேவை செய்பவர்களாகவே இருக்க வேண்டும்.
கடந்த கால அரசாங்கங்களில் அவ்வாறு நடைபெற்றது. இனி அவ்வாறு செய்ய முடியாது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப் படுத்தபட்டுள்ள நிலையில் அதிகாரிகளுக்கு எதிராகவும் அது நடைமுறைப்படுத்தப்படும்.
அதிகாரிகளுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. இனியும் அவர்கள் நீதியாகச் செயற்படத் தவறினால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதே போல அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களை அசௌகரிங்களுக்கு உள்ளாகும் வகையில் அழுத்தங்களைக் கொடுக்காமல் மக்களுடைய நலனைக் கருத்திற் கொண்டே செயற்பட வேண்டும் என்றார்.
மன்னர் மாவட்டச் செயலாளர் கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், மக்களின் காணிகள் விடுவிப்பு, ஆசிரிய இட மாற்றங்கள், மன்னார் வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் குறைபாடுகள்,பொது போக்குவரத்து சேவைகள், மற்றும் மன்னார் மாவட்டத்தின் வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் வேலை திட்டங்கள் ஆரம்பித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலக நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









