செம்மணி மனித புதைகுழியில், ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சுப் பகுதியுடன்,அணைக்கப்பட்டவாறு, சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனைச் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,அதனை முற்றாக அகழ்ந்தெடுத்த பின், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாகக் கூற முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
அத்துடன் கால்கள் மடிந்த நிலையில் அருகருகே புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது பார்வைக்குத் தெரிகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்புக் கூட்டுத் தொகுதிகளைச் சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி,
அறிக்கை வழங்கிய பின்னரே மேலதிகத் தகவல்களைக் கூற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 174 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, குழந்தை ஒன்றினைக் கட்டியணைத்தவாறும் ஒரு எலும்புக் கூட்டு தொகுதி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







