மன்னாரில் 30 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக மேலும் 14 காற்றாலைகள் அமைப்பதற்கு உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் குறித்த இரண்டாம் கட்ட காற்றாலைத் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வேறெந்த காலப்பகுதியிலும் நிகழாதவாறு கடந்த இரண்டு வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும்,மக்களின் வாழ்வியலை இந்த காற்றாலைத் திட்டமானது முற்றாக பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளதாகவும் கூறி, மன்னார் தீவிக்குள் காற்றாலை வேண்டாம் என வலியுறுத்தி மக்கள் சுழற்சி முறையிலான போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்களின் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து காற்றாலை சம்பந்தமாக உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்று சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினருக்கும் மன்னார் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (01.09) திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் பொது மக்களின் வாழ்வியல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது தொடர்பில் பொதுமக்கள் பிரதிநிதிகள் நிபுணத்துவ குழுவினரிடம் எடுத்துரைத்தனர்.
அத்தோடு மேலும் 100 நாட்களுக்கு இத்திட்டத்தை நிறுத்தி வைத்து நேரடியாக காற்றாலை அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு சென்று அங்கே உள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து இந்த காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த நிபுணத்துவ குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அத்துடன் குறித்த காற்றாலை திட்டத்தை ஒருபோதும் மன்னார் தீவுக்குள் அனுமதிக்க போவதில்லை எனவும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இத்திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் மக்கள் போராட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த நிபுணத்துவ குழுவினர் காற்றாலை அமைத்தல் தொடர்பான சகல வேலைத்திட்டங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இதனை நிறுத்துவது தொடர்பில் தாங்கள் எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முடியாது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவிக்க முடியும் எனவும் இதற்கான முடிவினை ஜனாதிபதியே மேற்கொள்வார் எனவும் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பிரசாந்த், உள்ளிட்ட குழுவினர், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரதேச செயலாளர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீனவ சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அருட்பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
குறித்த காற்றாலை விடயம் தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி மன்னார் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்று இருந்தது.
குறித்த சந்திப்பில் காற்றாலை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்றினை நியமிப்பதாகவும் அதுவரையில் ஒரு மாத காலத்திற்கு குறித்த காற்றாலை வேலை திட்டங்களை நிறுத்தி வைப்பதாகவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட குறித்த நிபுணத்துவ குழுவினர் மன்னாருக்கு வருகை தந்துள்ளதோடு நாளைய தினம் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.







