மன்னார் உயிலங்குளம் 542 வது காலாட்படைப் பிரிவின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று முருங்கன் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று(11.09) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் நோக்கில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ், புனர்வாழ்வு பணியகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவியுடனும் மன்னார் 54ஆவது காலாட்படை பிரிவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் A.M.C அபயகோனின் ஆலோசனையுடனும், இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.





குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கிலே வளவாளராக, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அஜந்தா சாமிலி வயலட் கலந்து கொண்டதுடன்,
விருந்தினர்களாக, மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன், 54ஆவது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ. எம். சி. அபயகோன் ,542 ஆவது காலாட்படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏ. ஆர் .டபுள்யு. சி. அசுரசிங்க ,வடக்கு மாகாணத்திற்கான புனர்வாழ்வு அதிகாரி லெப்டினன்ட் கேணல் டபிள்யூ. பி. டி பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
542 வது காலாட்படை பிரிவின் தளபதி, மற்றும் 8 வது விஜயபாகு காலாட்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், முருங்கன் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.
குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கானது இன்றைய தினம் மன்னார் பரிகாரி கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் உரையாற்றுகையில்,
"நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் பாவனை அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான கருத்தரங்கு நிகழ்வுகள் மிகவும் அவசியமானவை, இதனை ஏற்பாடு செய்த பாதுகாப்புப் படையினருக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்வாறான நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.












