மன்னார் காற்றாலைக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கிய நடை பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இரு இளைஞர்களும் இன்றையதினம் (12.09) வெள்ளிக்கிழமை மாலை மன்னாரை வந்தடைந்தனர்.
மன்னார் பகுதியில் இரண்டாம் கட்டமாக அமைக்கப்படவுள்ள காற்றாலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் மன்னாரை நோக்கிய நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10.09) ஆரம்பித் திருந்தனர்.
இந்நிலையில் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக இன்றைய தினம் மன்னாரை வந்தடைந்த இளைஞர்களை மாலை 6 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி எஸ்.மார்க்கஸ் அடிகளார் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் குறித்த இளைஞர்களுடன் இணைந்து தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதிவரை நடைப்பயணமாக வருகை தந்து, காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வினியோகித்தனர்.








