இழப்பீடு வழங்க எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் மறுப்பு

186
0
Spread the love

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பாதிப்புகளுக்காக இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைச் செலுத்த முடியாது என அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இழப்பீட்டை செலுத்துவதால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என தாம் நம்புவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் பயணித்த சிங்கப்பூருக்கு சொந்தமான (MV X-Press Pearl) கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.

இதனால் நாட்டின் கடல் வளம் பாரிய அளவில் மாசடைந்ததுடன், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கியிருந்தன. அத்துடன் கடல் வளமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்குரிய இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

ஒரு வருடத்திற்குள் குறித்த தொகையை செலுத்த வேண்டும் எனவும், அதில் முதலாவது தவணையாக 250 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இழப்பீட்டு தொகையினை திறைசேரியின் செயலாளரிடத்தில் செலுத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here