புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக நடுவீதியில் வைத்து அவரின் குடும்பத்தினரும் , பொதுமக்களும் இணைந்து போராட்டம் மேற்கொண்டனர்.
அவர் கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து ஐந்தாவது தினம் வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதமையினாலும் ஊர்காவற்துறை பொலிஸ்
பிரிவின் கீழுள்ள குறிகாட்டுவான் பொலிஸ் காவலில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டவரின் வீட்டிற்கு இன்னும்
இரு வெளிமாவட்ட நபர்களுடன் மதுபோதையில் சென்று இலஞ்சம் கேட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தை
மேற்கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு தீவகம் சிவில் சமூகம், புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு தனியார் பேருந்து சேவை சங்கம் போன்ற தன்னார்வ
தொண்டு அமைப்புக்கள் ஆதரவை வழங்கின.
அன்றைய தினம் புங்குடுதீவு தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பினையும்
மேற்கொண்டிருந்தனர்.
நடைபெற்ற கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டன .
1- ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் .
2- இலஞ்சம் கோரிய குறிகாட்டுவான் பொலிஸ் உத்தியோகத்தர் இடம் மாற்றப்பட்டு அவர் மீதும்
அவரோடு இணைந்து கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு வருகை தந்து இலஞ்சம் கோரிய ஏனைய இரு நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
3- கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.
4- கடந்த வருடம் வரை ஏற்கனவே நடைமுறையிலிருந்த புங்குடுதீவு மடத்துவெளி, மண்டைதீவு சந்தி பொலிஸ் சோதனை
சாவடிகள் மீளவும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
5- புங்குடுதீவு மத்தியில் நிரந்தர பொலிஸ் நிலையம் உருவாக்கப்படவேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் உணர்பூர்வமாக கோஷங்களை எழுப்பி வீதி மறியலில் ஈடுபட்டதால் யாழ்
நகரிலிருந்து வந்த யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அந்த கோரிக்கைகளை இயன்றவரை
உடனடியாக நிறைவேற்றுவதாகவும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறும் பொதுமக்களிடம் கோரினார்.
அந்த இடத்திலேயே குறித்த குறிகாட்டுவான் பொலிஸ் உத்தியோகத்தருக்கான இடமாற்ற உத்தரவு , கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கான முழு
நேர பொலிஸ் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தார் .
அத்துடன் போராட்டம் முடிவுக்கு வந்ததோடு கேரதீவு இந்து மயானத்திற்கு குறித்த நபரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க
புதைக்கப்பட்டது.
அடுத்த நாள் மண்டைதீவு சந்தி சோதனைச்சாவடி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி சோதனை சாவடிகள் மீளவும் அமுல்படுத்தப்பட்டு
சோதனை நடவடிக்கைகளை பொலிசார் ஆரம்பித்திருந்தனர்.
ஆனாலும் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான அனலைதீவை சேர்ந்த நபர் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் தீவகம் சிவில் சமூகத்தின் முயற்சியினால்
யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் தென்னியன்குளம் பிரதேச காட்டுப்பகுதியில்
கைது செய்யப்பட்டார்.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்ட அனலைதீவு செல்வக்குமார் வழங்கிய வாக்கு மூலத்திற்கமைய இந்த கொலையானது
யாழ் நகரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்த கொலை என்றும் இக்கொலையின் பிரதான சூத்திரதாரியாக புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவினை
சொந்த இடமாகவும் தற்காலிக முகவரி யாக கொக்குவில் பிரதேசத்தினை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை டினேஷ்குமார் ( டினோ )
என்பவர் என்றும் அவரது நெருங்கிய நண்பர் இக்கொலையின் பங்குதாரர் என்றும் தாங்கள் மூவரும் இணைந்தே
அகிலனை வெட்டிக் கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்ட செல்வக்குமார் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட அமரர் அற்புதராசா அகிலனின் பூதவுடலை வைத்து வீதியை மறித்து போராடியமைக்கு எதிராக
அதாவது சட்டவிரோத குழுவாக ஒன்று கூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்பட்டு ஊர்காவற்துறை
பொலிசாரினால் தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் செயலாளர் மாணிக்கவாசர் இளம்பிறையன் , உப தலைவர் கருணாகரன் குணாளன் ,
வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் இரு பொதுமக்களின் பெயர் குறிப்பிட்டு வழக்கு தாக்கல் மேற்கொண்டு
எதிர்வரும் 07- 10- 2025 அன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.







