சில ஊடகங்கள் நான் ஜனாதிபதியைச் சந்தித்தது தொடர்பில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளன என மன்னார் ஆயர் அந்தோணி பிள்ளை ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்,
மன்னார் பிரஜைகள் குழு நேற்று வியாழக்கிழமை( 09.10)மாலை அலுவலகத்தில் காற்றாலை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் மத குருமார்கள் மற்றும் சிலருடன் சென்று ஜனாதிபதியைச் சந்திப்பதாக இருந்தேன், அது கை கூடாமல் போன காரணத்தினால் நான் சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதியைத் தனியாகச் சென்று சந்தித்தேன், அதன் போது மன்னாரில் 14 காற்றாலைகளையும் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருப்பதை அறிந்து கொண்டேன், எனவே மக்கள் ஏன் காற்றாலையை எதிர்க்கிறார்கள் என்பது தொடர்பில் அவருக்குத் தெளிவுபடுத்தினேன்.
இது குறித்து ஜனாதிபதி தெரிவிக்கையில், இந்த 14 காற்றாலைகளைத் தவிர மன்னார் தீவில் வேறு காற்றாலைகளை அமைக்க அனுமதிக்கப்போவதில்லை எனவும் , கனிய மண்ணகழ்வை முற்றாக நிறுத்துவோம் எனவும் அவர் உறுதியளித்தார். அத்துடன் இதனை கபினட் ஊடாகவும் உறுதிப்படுத்தி தருவதாக அவர் என்னிடம் கூறினார்,
அதற்கு நான் மக்களுடன் சென்று கலந்துரையாடிவிட்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என ஜனாதிபதியிடம் கூறிவிட்டு வந்தேன். அதனை இன்றைய தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மக்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளேன்.
நான் அங்கே காற்றாலை சம்பந்தமாக எந்த காகிதங்களிலும் கையெழுத்திட்டு விட்டு வரவில்லை சில செய்தித் தளங்கள் தங்களது ஊகங்களை வைத்துக் கொண்டு உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளன. அவை என்னிடமிருந்து பெற்ற தகவல்கள் அல்ல எனத் தெரிவித்த அவர்
போராட்டக்காரர்களோடும் மக்களோடும் நாங்கள் கலந்துரையாடி காற்றாலை தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவோம் என மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் அரசாங்க அதிபர்,
க. கனகேஸ்வரன்,பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மார்க்கஸ் அடிகளார்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ரோகினி நிஷாந்தன்







