வடக்கு மாகாண சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அனைத்து சுற்றுலாத்துறை பங்குதாரர்களையும் ஒன்றிணைத்து சுற்றுலாத்துறையில் 5 வருடத்திற்கான செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தீர்மானித்துள்ளது.
அதற்கான தந்திரோபாயத் திட்டமிடலை வவுனியா பல்கலைக்கழகம் பொறுப்பேற்று செயற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் அந்தத் திட்டத்தின் முதலாவது கலந்துரையாடல் இன்றைய தினம் (22.10) புதன்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான வளங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் தற்போதைய நிலை மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய வழிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் சுற்றுலாத் துறை தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் கலந்து கொண்ட அரச அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடல் தொடர்பாக மன்னார் அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்திலேயே சுற்றுலாத்துறை வளரக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் காணப்பட்டாலும் அவை மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. அந்த வகையில் அதை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கப்பெறுகின்ற நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சுற்றுலாத்துறையில் சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவை சுற்றுலா துறையை வளர்க்கக்கூடிய வகையில் இல்லை. அந்த வகையில் சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான திட்டங்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கும் பணிகளை வவுனியா பல்கலைக்கழகத்தினர் தற்போது மேற்கொண்டுள்ளனர். அந்தத் தகவல்களைக் கொண்டு அவர்கள் சுற்றுலா துறையின் அடிப்படைத் திட்டங்களைத் தயாரிக்க உள்ளனர் அதன் பின்னர் மீண்டும் ஒருமுறை திணைக்களத் தலைவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பங்குதாரர்களுடன் கலந்துரையாடி, சுற்றுலாத்துறை சார்ந்த நிரந்தர திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது என்றார்.”
குறித்த கலந்துரையாடலில்
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் பி.யசோதரா, சுற்றுலா பணிகத்தின் தலைவர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன், வவுனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் வியாபார கற்கைகள் துறையின் பீடாதிபதியுமான வை.நந்தகோபன் உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ர விரிவுரையாளர்கள் றுகுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்மிக்க லியனகே, பல்கலைக்கழக மாணவர்கள், மன்னார் அரசாங்க அதிபர் கே..கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் உட்பட பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் சுற்றுலா வழிகாட்டிகள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.
















