ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் (24.11)திங்கட்கிழமை நாடளாவிய ரீதியிலான சைக்கிள் பயணம் ஒன்றை கிழக்கு மாகாணம் பொத்துவில்லைச் சேர்ந்த கே.சுல்பிஹார் ஆரம்பித்துள்ளார்.
நேற்றைய தினம் (24) ஜனாதிபதியின் பிறப்பிடமான அனுராதபுரம் தம்புத்தேகமையில் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்து மாலையில் மன்னாரை வந்தடைந்தார்.
இன்று (25)காலை மன்னாரில் இருந்து வவுனியாவை நோக்கி இரண்டாவது நாள் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த சைக்கிள் பயணம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்கா அவர்களின் 57 வது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக நான்கு விடயங்களை மையப்படுத்தி 10 நாட்கள் தனிநபர் சைக்கிள் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.
அதிமேதகு ஜனாதிபதியின் பிறந்த தினத்தில் அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும்,இலங்கை மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் இந்த அரசாங்கத்தின் ஆட்சி நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டியும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும்,நாட்டில் தற்போது காணப்படுகின்ற சமாதான நல்லினத்துக்காகவும்,
இந்த தனிநபர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
அந்த வகையில் நேற்றைய தினம் காலை அனுராதபுரம் தம்புத்தேகமையிலிருந்து எனது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்து மன்னாரை வந்தடைந்தேன்.அங்கே மக்கள் என்னை கௌரவமான முறையில் வரவேற்று உபசரித்தார்கள்.
இன்றைய தினம் காலை 8 மணி அளவில் வவுனியாவை நோக்கி எனது இரண்டாவது நாள் பயணத்தை ஆரம்பித்துள்ளேன்.
அதன் பிற்பாடு வவுனியாவில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ,பொத்துவில்,வெல்லவாய,கதிர்காமம்,அம்பலாங்கொடை,மாத்தரை,களுத்துறை போன்ற இடங்களுக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு பத்தாவது நாளில் களுத்துறையிலிருந்து கொழும்பு சென்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக எனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்.
நான்கு அம்சங்களை உள்ளடக்கிய எனது இந்த பயணத்திற்கு ஆதரவளித்த மன்னார் மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறேன் என்றார்.”
இன்று காலை மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் மன்னார் பாலத்தின் அருகாமையில் இருந்து தள்ளாடி சந்தி வரை அவருக்கு ஆதரவளித்து வழியனுப்பி வைத்தனர்.








