டிட்வா புயலின் தாக்கத்துக்குப் பின்னர், இலங்கையின் பல பகுதிகளில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய பொலுத்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் வீதிகளிலும் ,வீட்டு வளவுகளிலும் பரவலாக காணப்படுகின்றன. இவ்வாறான இயற்கை மாசுபாடுகளை அகற்றிச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில்,”தூய்மையும் பசுமையும் நிறைந்த இலங்கைக்கான மனிதநேய செயற்பாடுகள்”என்னும் தொனிப்பொருளில்தூய்மையாக்கல் நடவடிக்கைகள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..
அதன் ஒரு அங்கமாக, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையினரால் மன்னார் நகரில் தூய்மையாக்கல் பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று(04.01) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்த தூய்மையாக்கல் பணியில், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளை அலுவலர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்கள், இணைந்து, சூழலை மாசுபடுத்தும் நிலையில் காணப்பட்ட பொலுத்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை சேகரித்து அவற்றை அங்கிருந்து அகற்றினர்.
மேலும், குறித்த துப்புரவாக்கல் நடவடிக்கைக்கு மன்னார் மாவட்டச் செயலகமும் மன்னார் நகர சபையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன
இதேபோன்று, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பல மாவட்டங்களிலும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைகள் ஊடாகத் தூய்மையாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல்,மாணவர்களின் கல்வி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அவற்றிற்கு உதவி வழங்கும் வகையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதநேயச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது







