சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு

151
0
Spread the love

ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு குறுகிய கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் இன்று (12.01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவை கூட்டாகக் கொண்டாடுவதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு பங்காளித்துவத்தை முன்னெடுத்துச் செல்வதுமே இந்தச் சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நல்லுறவு மற்றும் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட நீண்டகால நட்பு மற்றும் காலத்திற்கேற்ற ஒத்துழைப்பு ஆகியவற்றை இரு அமைச்சர்களும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை விரைவாக மீட்சியடையும் எனத் தான் நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here