மன்னார் தலைமன்னார் பகுதியில் அமைந்துள்ள ராமர் பாலம் என்று அழைக்கப்படும் இலங்கைக்கு சொந்தமான 8 மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடுவதற்காக படகுச் சேவைகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (0810) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்திலே
மன்னார், தலைமன்னார் பகுதியில் ஆரம்பிக்கவுள்ள சுற்றுலாப் படகுச் சேவை தொடர்பில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்திலே சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் முகமாக அடையாளம் காணப்பட்டுள்ள மிக முக்கியமான இடமான ராமர் பாலம் எனப்படும் இலங்கைக்கு சொந்தமான 8 மணல் திட்டுகளுக்குச் சென்று பார்வையிடுவதற்கு , சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போக்குவரத்து சேவையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, குறித்த இடத்திற்கு படகுச் சவாரியை மேற்கொள்ளவிற்கும் படகு உரிமையாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தினை ஆரம்பிக்கும் பொழுது வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணங்களை அறவிடுவதற்கான
இடம் ஒன்றை ஒதுக்குதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இன்றைய தினம் இடம்பெற்றது,
குறித்த கலந்துரையாடலானது ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது.
நாங்கள் மீளவும் இது தொடர்பாக புத்திஜீவிகளுடனும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுடனும் கலந்துரையாடிய பின்பு படகுச் சேவைத் திட்டத்தை வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணங்களை அறவிடும் அதிகாரத்தை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் எனவும் அந்தப் பகுதியை வன ஜீவ ராசிகள் திணைக்களத்தினரிடமிருந்து மீட்டு பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் எனவும் சில பிரதேச சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தமையால், சபையில் சிறு குழப்பம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் மீண்டும் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளத் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலாளரின் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில், மன்னார் பிரதேச செயலாளர், மன்னார் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், வன ஜீவ ராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.










